Saturday, November 30, 2013

உலக நாடுகள் இந்தியாவிடம் இருந்துதான் சட்டம் கற்றுக் கொள்ள வேண்டும்! (எப்படி நம் நீதி? )



ஒரு வழக்ககில் ஆதாரம் இல்லாத போதும் சந்தர்ப்ப சூழ்நிலை கருதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு வழக்கில் குற்றவாளியாக கருதப்பட்டவரின் வாக்குமூலம் அதிகாரிகளால் நேர்மையாக பதியப்படாமல் அந்த வழக்கில் குற்றவாளிக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ளது. முன்றாவது வழக்கில் அதிகார வர்க்கத்தால் சாட்சிகள் பல்டி அடிக்க வைக்கப்பட்டு குற்றவாளிகள் வீதி உலா வர வைக்கப்படுள்ளனர்.


இதில் இருந்து நமக்கு புரிவது என்னவென்றால்
உண்மையான குற்றவாளிகள் வீதி உலாவரவும்
குற்றவாளிகள் என்று சந்தேகப்படுபவர்கள் ஆயுள் தண்டனை கைதிகளாகவும்
நிராதிபதிகளை வேறு உலகத்திற்கு அனுப்பவும் முடியும்
என்று இந்திய சட்டம் சொல்ல வருகிறது என்று புரிகிறது.

வாழ்க இந்திய ஜனநாயகம்....
அன்புடன்
மதுரைத்தமிழன்

மூன்று வழக்கு மூன்று தீர்ப்பு :::::

முதல் வழக்கு :ஆருஷி /ஹேமராஜ் கொலை வழக்கில் எந்தவித ஆதாரம் இல்லாத போதும் சந்தர்ப்ப சூழ்நிலை கருதி அவர்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி அருகில் உள்ள நொய்டாவைச் சேர்ந்த பல் மருத்துவ தம்பதி ராஜேஷ் தல்வார் மற்றும் நூபுர் தல்வார். அவர்களுடைய 14 வயது மகள் ஆருஷி. 2008, மே மாதம் 15-ந்தேதி தமது படுக்கையறையில் ஆருஷி கழுத்தறுக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தார்.அது குறித்து விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸார் ராஜேஷ் தல்வார் வீட்டில் வேலை செய்த ஹேம்ராஜ்தான் ஆருஷியைக் கொலை செய்துவிட்டுத் தப்பிவிட்டார் என்ற முடிவுக்கு வந்தனர். ஆனால், மறுநாள் தல்வார் தம்பதி வசித்த குடியிருப்பு மாடியில் வேலைக்காரர் ஹேம்ராஜ் (45 வயது) சடலம் கண்டெடுக்கப்பட்டது.அதையடுத்து, மீண்டும் விசாரணை நடத்திய உத்தர பிரதேச போலீஸ், ஆருஷியின் தந்தை ராஜேஷ் தல்வாரைக் கைது செய்து சிறையில் அடைத்தது. ஆனால் மாநில போலீஸார் விசாரணை குறித்து அதிருப்தி தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அப்போது உத்தர பிரதேச முதல்வராக இருந்த மாயாவதி இந்த சம்பவம் குறித்து சி.பி.. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

2 ஆண்டுகளுக்குப் பிறகு, கழித்து சரியான ஆதாரம் இல்லை என்று கூறி வழக்கை முடித்துக் கொள்ள விரும்புவதாக காஜியாபாத் நீதிமன்றத்தில் சிபிஐ அனுமதி கோரியது. ஆனால், இந்தக் கோரிக்கையை நிராகரித்த சிறப்பு நீதிபதி எஸ். லால், விசாரணையைத் தொடரும்படி உத்தரவிட்டார். அதை எதிர்த்து ஆருஷியின் பெற்றோர் அலகாபாத் உயர்நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் மேல் முறையீடு செய்தனர்.

ஆனால், காஜியாபாத் சிபிஐ நீதிமன்றத்தின் உத்தரவில் தலையிட முடியாது என்று அந்த நீதிமன்றங்கள் தெரிவித்துவிட்டன. இந் நிலையில், ஆருஷியின் தாய் நூபுர் தல்வார் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இக் கொலை வழக்கு தொடர்பாக தல்வார் தம்பதி 15 மாதங்களுக்கும் மேலாக தொடர் விசாரணையை சந்தித்து வந்தனர். ஏறக்குறைய ஐந்தரை ஆண்டுகளாக ஆருஷி கொலை வழக்கு ஊடகங்கள் வழியாக பொதுமக்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.

இந் நிலையில், விரைவில் ஓய்வுபெற உள்ள நீதிபதி எஸ். லால் இன்று இந்த வழக்கில் தீர்ப்பை வழங்கினார்.

இரண்டாம் வழக்கு :சங்கர ராமன் கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் உள்பட 24 பேரையும் விடுதலை செய்து நீதிபதி முருகன் தீர்ப்பு வழங்கினார்.
தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் விவரம் வருமாறு:

கொலை செய்யப்பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா, அவரது மகன் ஆனந்த் சர்மா ஆகியோர் அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக சாட்சியம் அளித்தபடியாலும், கொலைக்கு மூல காரணமான 30-8-2004 அன்றைய தேதியிட்ட கடிதம் தொடர்பாக தலைமை புலன் விசாரணை அதிகாரி ஒப்புக்கொண்டு எந்த புலன் விசாரணையும் செய்யாததாலும், கொலைக்கான மூல காரணம் நிரூபிக்கப்படவில்லை.

குற்றம் மற்றும் கூட்டு சதியில் ஈடுபட்டதாக கூறப்படும் எதிரிகள், கிருஷ்ணசாமி என்ற அப்பு மற்றும் கதிரவன் ஆகியோர் சதித்திட்டம் தீட்டிய நேரத்தில் அந்த இடத்தில் இல்லை என்று தெளிவாக குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளது.

வழக்கின் புகார்தாரரும், நேரில் பார்த்த சாட்சியுமான கணேஷ் (சங்கர ராமனுடன் பணிபுரிந்தவர்) அரசு தரப்பு வழக்கிற்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளபடியால் வழக்கின் அடிப்படையான புகார் நிரூபிக்கப்படவில்லை.

சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகளும் மற்ற சாட்சிகளும், சம்பவத்தின்போது இறந்துபோன சங்கர ராமனுடன் பணிபுரிந்த சாட்சிகளுமான கணேஷ், துரைக்கண்ணு, குப்புசாமி ஆகியோர் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் பிறழ் சாட்சிகள் ஆகிவிட்டனர்.

கொலை செய்யப்பட்ட சங்கர ராமனின் மனைவி பத்மா, மகள் உமா மைத்திரேயி ஆகியோர் கொலையாளிகளை நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை சம்பவ இடத்தில் சம்பவத்துக்கு முன்பும், பின்பும் கொலையாளிகளை பார்த்த சாட்சிகள் அனைவரும் பிறழ் சாட்சியாக மாறிவிட்டார்கள்.

சங்கர ராமன் கொலையில் 7-வது முதல் 12-வது வரையிலான எதிரிகள்தான் (ரஜினிகாந்த், அம்பிகாபதி, மாடு பாஸ்கர், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், அனில்குமார்) கொலை செய்தார்கள் என்பதை நிரூபிப்பதற்காக விசாரிக்கப்பட்ட 20 சாட்சிகள் அரசு தரப்புக்கு எதிராக சாட்சியம் அளித்துள்ளனர். அவர்கள் பிறழ் சாட்சியாக மாறிவிட்டனர்.

எதிரிகளை அடையாள அணிவகுப்பின்போது அடையாளம் காட்டிய எந்த சாட்சியும் நீதிமன்றத்தில் அடையாளம் காட்டவில்லை. மேலும் அவர்கள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள். எதிரிகள் மீது குற்றத்தை நிரூபிக்க விசாரித்த மிக முக்கியமான 83 சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள். அவர்கள் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சாட்சியம் அளிக்கவில்லை.

எதிரிகள் மீது உள்ள குற்றச்சாட்டுகளை நிரூபிக்க நீதித்துறை நடுவர் முன்பு வாக்குமூலம் கொடுத்த மிக முக்கியமான சாட்சிகள் பிறழ்சாட்சியாக மாறிவிட்டார்கள். அவர்களது சாட்சியங்களை ஏற்றுக்கொள்ள ஏதுவாக இல்லை.

கொலையாளிகள் சம்பவ இடத்திலிருந்து தப்பி செல்ல பயன்படுத்திய 3 மோட்டார் சைக்கிள்களை சாட்சி விசாரணையின்போது யாரும் அடையாளம் காட்டவில்லை. கொலையாளிகளுக்கு பணம் கொடுத்ததாக விசாரிக்கப்பட்ட சாட்சிகள் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டார்கள். எனவே கொலை செய்ய குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் பணம் கொடுத்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

போலி குற்றவாளிகளை சென்னை 5-வது பெருநகர நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த வக்கீல்கள் 2 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிவிட்டபடியால் போலி குற்றவாளிகளை எதிரிகள் சரணடையவைத்தார்கள் என்பதும் நிரூபிக்கப்படவில்லை.

அடையாள அணிவகுப்பு நடத்திய நீதித்துறை நடுவர்கள் முன்பு சாட்சியத்திற்கு ஏற்பளிக்கும் விதத்தில் எந்த சாட்சிகளும் சாட்சியம் அளிக்கவில்லை. இதனால் எதிரிகள்தான் இந்த குற்றத்தை செய்தார்கள் என்பது நிரூபிக்கப்படவில்லை.

போலீஸ் சூப்பிரண்டு... பிரேம்குமார், இவ்வழக்கின் புலன் விசாரணையில் தேவையற்ற தலையீடும், சட்டத்திற்கு அப்பாற்பட்ட செயல்பாடுகளும் செய்துள்ளார் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்த கருத்து வழக்கு விசாரணையின்போது சாட்சிகள் வாயிலாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

அவரது தலையீடு புலன் விசாரணையில் இருந்தபடியால் புலன் விசாரணை அதிகாரியால் (சக்திவேலு) தன்னிச்சையாக, பாரபட்சமின்றி, சட்டத்திற்கு உட்பட்டு விசாரணை செய்ய முடியவில்லை.

தலைமை புலன் விசாரணை அதிகாரி, ஏனைய அதிகாரிகள் விசாரணை சாட்சிகளை நீதிமன்றம் முன்பு ஆஜர்படுத்த தவறிவிட்டார்கள்.

இந்த வழக்கில் சில சாட்சிகள் (சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன்) வேண்டுமென்றே புகுத்தப்பட்டுள்ளார். சில சாட்சிகள் வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தப்பட்டுள்ளனர். மேலும் குற்றஞ்சாட்டப்பட்ட கதிரவன், ரஜினிகாந்த் ஆகியோரை சட்டத்திற்கு புறம்பாக போலீஸ் காவலில் வைத்துள்ளனர்.

சம்பவத்தின்போது ஏட்டு ஆகவும், தற்போது சப்-இன்ஸ்பெக்டராகவும் பணியாற்றி வரும் கண்ணன் சாட்சிகளை வாக்குமூலம் கொடுக்க அச்சுறுத்தி இடைநீக்கம் செய்யப்பட்டவர். பின்னால் அவர் வாக்குமூலம் கொடுக்க பணியில் சேர்க்கப்பட்டுள்ளார். சாட்சிகள் மூலம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் அச்சுறுத்தல் மூலம் பெறப்பட்டதாக உள்ளது.

இவ்வாறு நீதிபதி முருகன் தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

மூன்றாம் வழக்கு :

பதிவு செய்த அதிகாரி தியாகராஜன் "எதற்காக பேட்டரி கேட்டார்கள் என்று எனக்கு தெரியாது" என்ற பேரறிவாளன் சொன்ன வாக்கியத்தை விட்டுவிட்டார். மொழி பெயர்த்த அதிகாரி "தெரிந்தே செய்தேன்" என்பதை சேர்த்துவிட்டார். நிரபராதிக்கு தூக்கு விதித்த நீதிபதி மொழிபெயர்ப்பை "மட்டும்" நம்பி இதை "அரிதினும் அரிதான கொடுங்குற்றம்" என்று தூக்கு தண்டனை கொடுத்தார்.......



முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி ஸ்ரீபெரும்புதூரில் 1991 மே மாதம் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டபோது மனித வெடிகுண்டுக்கு பலியானார். இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கை விசாரித்த சிறப்பு நீதிமன்றம் நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் ஆகியோருக்கு மரண தண்டனை வழங்கியது.


ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனைக் கைதியாக இருக்கும் பேரறிவாளன், போலீஸ் விசாரணையின் போது அளித்த ஒப்புதல் வாக்குமூலத்தை பதிவு செய்த காவல்துறை உயரதிகாரியான தியாகராஜன் அதில் ஒரு வாக்கியத்தை தான் பதிவு செய்யவில்லை, என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

தன்னிடம் வாக்கு மூலம் அளித்த பேரறிவாளன், தான் சிவராசன் என்பவருக்கு பாட்டரிகளை வாங்கிக் கொடுத்த போதிலும், அதனை எதற்காக அவர் வாங்கித்தரச் சொன்னார் என்பது குறித்து தனக்கு ஏதும் தெரியாது என்று கூறியதை தான் பதியாமல் விட்டுவிட்டதாக தியாகராஜன் கூறினார்.

எதற்காக சிவராசன் பாட்டரி கேட்டார் என்பது தனக்கு தெரியாது என்றும், அது கொலைக்கான குண்டுக்கு பயன்படுத்தப்பட்டது என்ற விஷயம் தனக்கு தெரியாது என்றும் பேரறிவாளன் கூறியதால், அது ஒரு குற்ற ஒப்புதல் வாக்கு மூலமாக அல்லாமல், ஒரு விடுதலை வாக்கு மூலமாக அமைந்துவிடும் என்ற காரணத்தால், அந்த வாக்குமூலத்தை தான் பதிவு செய்தபோது, தொழில் ரீதியான ஒரு தர்மசங்கடம் தனக்கு ஏற்பட்டதாக தியாகராஜன் கூறுகிறார்.

தான் அப்படிச் செய்ததை ஒரு தவறு என்று கூடச் சொல்லலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பின்னர் ஒரு சந்தர்ப்பத்தில், தமது தாக்குதல் திட்டம் எவருக்கும் தெரியாது என்று ஒரு வயர்லஸ் தொடர்பில் சிவராசன் கூறிய தகவல் விசாரணைக் குழுவுக்கு கிடைத்தபோது, முன்னர் தனக்கு கொலை பற்றி தெரியாது என்று பேரறிவாளன் கூறியது உண்மை என்பது உறுதியாகியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த நிலையிலேயே, தற்போது பேரறிவாளன் தூக்குத் தண்டனையை எதிர்நோக்கியிருப்பதால், தான் செய்த அந்த விஷயம் அவரது உயிரைக் காப்பாற்றலாம் என்பதால் தான் இப்போது அதனை வெளிப்படையாகக் கூறுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பிபிசி தமிழோசைக்கு தியாகராஜன் அவர்கள் அளித்த சிறப்புப் பேட்டியை நேயர்கள் இங்கு கேட்கலாம். http://www.bbc.co.uk/tamil/multimedia/2013/11/131124_rajivcaseofficial.shtml

அன்புடன்
மதுரைத்தமிழன்






9 comments:

  1. வழக்குகள் நீண்ட நாட்கள் நடைபெறுவதால் சூழ்நிலைகள் காரணமாக சாட்சிகள் மாறிவிடுகிறார்கள்.எப்படியும் தீர்ப்பு அளிக்க சட்டம் இடம் கொடுப்பது வேதனை.

    ReplyDelete
  2. நீதியென்பது இந்தியாவில்
    கேலிக்கூத்தான விஷயமாகி வெகு நாளாகிவிட்டது
    அருமையாக விரிவாக பதிவிட்டமைக்கு
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. அதான் நீதி தேவதையின் கண்களை கட்டிவிட்டார்களே!
    பிறகு யார் கையை பிடித்துக்கொண்டு அவள் நடக்கின்றாளோ, அதுவே பாதை/நீதியாகிறது
    வாழ்க உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு. நான்கெல்லாம் வல்லரசு குடிமக்கள்...

    ReplyDelete
  4. வாழ்க பணநாயகம்!!

    ReplyDelete
  5. நம்ம நாட்டு சட்ட புத்தகங்களை கரையான் கூட தின்னாது. அவ்வளவு அபத்தங்கள். இதில் எங்கே உண்மையான நீதி கிடைக்கப்போகிறது..?

    ReplyDelete
  6. நமது நீதித்துறையின் போக்கு புரிபடவில்லை! என்ன செய்வது!

    ReplyDelete
  7. வணக்கம் சகோதரரே
    சட்டத்தில் ஓட்டை இருக்கிறது என்பார்கள் இந்த வழக்கையெல்லாம் பார்க்கும் போது அப்படி தெரியவில்லையே! சட்டமே ஓட்டையாகத் தெரிகிறது. சட்டம் பணம், ஆள்பலம், அதிகாரப் பிண்ணனி எல்லாம் பார்க்குமென்றால் கிராமங்களில் நடைபெறும் கட்டபஞ்சாயத்துகள் இருந்துவிட்டு போகட்டுமே என்பதே பலரின் எண்ணம். பகிர்வுக்கு நன்றி..

    ReplyDelete
  8. பல்லாயிரம் மக்களை கொன்றால் பிரதம வேட்பாளர்..... இது தான் இந்தியா

    ReplyDelete

நான் அறிவு ஜீவி அல்ல ஒரு சாதாரணமான் மனிதன் தான்.இங்கு நான் பதியும் பதிவுகளில் உள்ள கருத்துகள் "மிகவும் சரி"யென்று சொல்லமாட்டேன் அது அன்றைய மனநிலையில் என் மனதில் எழும் கருத்துகளே...அதனால் உங்களது மனசுலபட்ட மாற்று கருத்துகளை தாராளமாக பகிரலாம். ஆனால் தேவையற்ற, வரம்புமீரிய, அநாகரிகமான வார்த்தைகளாலும் பதிவிற்கு சம்பந்தமில்லாமல் கருத்துக்கள் சொல்லப்பட்டால் எந்த வித பதில் விளக்கமின்றி அந்த கருத்து டெலீட் செய்யப்படும்.